Thursday, November 26, 2009

ஷாஜகான் வரலாறு படமாகிறது; மும்தாஜ் வேடத்தில் ஐஸ்வர்யாராய்

முகலாய மன்னன் ஷாஜகானின் வரலாறு சினிமா படமாகிறது. ஹாலிவுட் நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது. இதில் ஷாஜகான் வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லியும் மும்தாஜ் கேரக்டரில் ஐஸ்வர்யாராயும் நடிக்கின்றனர்.
பென் கிங்ஸ்லி 1982-ல் வெளியான “காந்தி” படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் நடித்தவர். அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. அப்போது “காந்தி” படம் உலகமெங்கும் பரபரப்பாக ஓடியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாஜகான் படம் மூலம் மீண்டும் இந்திய சரித்திர கதையில் நடிக்கிறார்.
ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மேல் அளவற்ற காதல் கொண்டிருந்தார். மும்தாஜூக்கு 14-வது குழந்தை பிறந்தபோது மரணம் அடைந்தார். மும்தாஜ் மேல் வைத்த காதலை வெளிப்படுத்தும் வகையில் ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டினார். இதன் கட்டுமான பணிகள் 1632-ல் ஆரம்பித்து 1654-ல் முடிந்தது. அதன் பிறகு மகனாலேயே ஷாஜகான் சிறை வைக்கப்பட்டார். அங்கேயே அவர் வாழ்வு முடிந்தது.
தாஜ்மகால் தற்போது ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஷாஜகான் படத்துக்கு திரைக்கதை உருவாக்கும் பணிகளும், இதர நடிகர், நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே ஜோதா அக்பர் உள்ளிட்ட பல சரித்திர படங்களில் நடித்துள்ளார்.